tamilnadu

img

தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மம்தாவுக்கு 48 மணி நேரம் கெடு

கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் போராட்டம் நடத்தும் மருத்துவர்களின் கோரிக்கையை முதல்வர் மம்தா, 48 மணி நேரத்திற்குள் நிறைவேற்றாவிட்டால், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம் கெடு விதித்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கத் தவறியதால், முதியவர் ஒருவர் இறந்துவிட்டார் என்று கூறி, அந்த முதியவரின் உறவினர்கள், மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், 2 மருத்துவர்கள், பலத்த காயமடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து, தங்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், அனைத்து மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்; பயிற்சி மருத்துவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்; மருத்துவர்களின் போராட்டத்தை தூண்டிவிட்டதே, கம்யூனிஸ்டுகளும், பாஜக-வினரும்தான் என்று கூறியதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுமார் 800 மருத்துவர்கள் தங்களின் பணிகளையும் ராஜினாமா செய்துள்ளனர்.

கொல்கத்தா மருத்துவர்களுக்கு ஆதரவாக நாட்டின் பிற மாநிலங்களிலுள்ள மருத்துவர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கத்தினர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். “மேற்குவங்கத்தில் போராட்டம் நடத்தும் மருத்துவர்களின் கோரிக்கையை 48 மணி நேரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என கெடு விதிக்கிறோம். இதனை நிறைவேற்ற தவறினால், நாங்களும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று, அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

;